பிரான்ஸில் வசிக்கும் இலங்கைத் தமிழ் பழைய மாணவர்களால், பழைய மாணவர் சங்கங்களின் ஆதரவுடன், காலத்தின் இன்றியமையாத தேவை கருதி «இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம்» 24.5.2015ல் பாரிஸில் அங்குரார்ப்பணம் செய்யபட்டுள்ளதை தங்களுக்கும் அறியத்தருவதில் மகிழ்வடைகிறோம். காலத்தால் அழிக்கமுடியாத சொத்து கல்வியென்பதை நாங்களும் நீங்களும் தெளிவாகவே அறிவோம். ஆதலால் தங்களின் ஒத்துழைப்புடன் இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களில் கல்விகற்கப்போதிய வசதிகள் இல்லாத தமிழ்ப்பாடசாலைகளின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திலிருத்தி நம் உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்கத் துணிந்துள்ளோம்.
தேவை எங்குள்ளதோ உதவிக்கான தெரிவும் அங்குதான் நடைபெறவேண்டும். காலந்தாழ்த்தி வரும் கரம்கொடுப்புகளால் யாரும் பயனடையப் போவதில்லை. கல்வித்தாகம் கொண்டிருந்தும் அதற்கான வசதிகளற்றிருப்போரை நோக்கி நம் உதவிக்கரங்களை நீட்டுவதற்கான காலம் இன்னமும் தாமதமாகிவிடவில்லை.
''ஆயிரம் மாணவர்களை நோக்கி..."
காலத்தின்தேவைகருதி உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியமானது 'ஆயிரம் மாணவர்களை நோக்கி...'என மகுடமிட்டு தனது முதலாவது பணியை ஆரம்பிக்கிறது.
எமது தாயகத்தில், கல்வியில் ஆர்வமிருந்தும் குடும்பச்சூழல் காரணமாக படிப்பைத் தொடரமுடியாது தவிக்கும் ஆயிரம் மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உதவ எமது ஒன்றியம் முனைகிறது.
மாணவர்களுக்கு மாதாந்தம் தலா ஆயிரம்ரூபா வீதம், பத்து மாதங்களுக்கு அதாவது ஆண்டு ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபா வைப்பிலிடப்படும். மாணவர்களது தேர்ச்சி அறிக்கை, கல்வி ஆர்வம் என்பவற்றை கணக்கில்கொண்டு அவர்களுக்கான உதவி தொடரப்படும்.
எமது செயற்குழு உறுப்பினர் மூலமாகவும், இலங்கையிலுள்ள சமூகப்பொறுப்பு வாய்;ந்த மனிதர்களாலும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கான உதவி பாடசாலை அதிபர் மற்றும் பொறுப்பாசிரியரால் கண்காணிக்கப்படும். பாடசாலை வங்கியில் இடப்படும் பணம் கல்வித்தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
எமது இந்த திட்டத்தில் ஆர்வமுள்ள நீங்களும் இணைந்துகொள்வதை வரவேற்கிறோம்.
ஆரோக்கியமான கல்வியே மனிதவளர்ச்சியின் மூலாதாரம். உறுதியான சமூகக்கட்டமைப்பே ஒரு இனத்தின் காப்புறுதி. மாணவர்களுக்கு கல்வியூட்டுவதன்மூலம் ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாக்கப்படுகிறது. ஒரு மனிதன் தனது சுயபலத்தில் நிற்பதற்கான விதை விதைக்கப் படுகிறது.
உங்கள் மாதாந்த சிறுதொகை உதவி ஆதரவற்ற மாணவர்களை ஆற்றுப்படுத்தும். அவர்கள் வாழ்வில் நம்பிக்கையூட்டும்.! நீங்கள் ஒவ்வொரு மாணவனையோ, மாணவியையோ அல்லது உங்கள் வசதிக்கு ஏற்ப பல மாணவர்களையோ பொறுப்பேற்பதன்மூலம் நீங்களும் சமுதாயத்திற்கு ஒளி ஏற்றுபவர் ஆகின்றீர்கள்!
வாழ்வில் முன்னேறத்துடிக்கும் ஆதரவற்ற ஒரு குழந்தையின் புன்னகை அழகானது. அந்தப்புன்னகை இறைபணியைவிட மேலானது. அது உங்கள் வாழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்.
இத் திட்டத்திற்கு நீங்கள் உதவுவதோடு உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களையும் உதவச்;செய்யுங்கள்! ஒன்றியத்தின் செயற்திட்டங்களோடு நீங்களும் கைகோர்த்துக்கொள்ளுங்கள்!
இலங்கைத் தமிழ் பழையமாணவர் ஒன்றியத்தில் இணைந்துகொள்வதற்கான வருடச்சந்தா 30 யூரோக்கள். ஒன்றியத்தில் உறுப்பினரல்லாத ஒருவரும் 'ஆயிரம் மாணவர்களை நோக்கிய..' திட்டத்தில் இணைந்துகொள்ளலாம்.
'பிறர் பிள்ளை தலை தடவ,
தன் பிள்ளை தானாய் வளரும்'